92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வு அறிவிப்பு 92 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் குரூப்-1 பிரதான தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.