தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள்


தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள்


மதுரை: வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகர் மூன்று நாட்கள் மதுரையில் தங்கியிருந்து விட்டு இன்று அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைக்கு திரும்பினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழகருக்கு பிரியாவிடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.

தங்கப்பல்லக்கில் மதுரைக்கு வந்து பூப்பல்லக்கில் திரும்பிய கள்ளழகரை வழியனுப்பிய பக்தர்கள்

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் தேரோட்டத்துடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது. கடந்த 14ஆம் தேதி மலையில் இருந்து மதுரைக்கு வந்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்த எதிர்சேவை கோலாகலமாக நடைபெற்றது.

சனிக்கிழமை அதிகாலையில் வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் கள்ளழகர் வைகையில் இறங்கும் கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசனம் செய்வதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். இதற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தத்கள் மதுரையில் குவிந்தனர். வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்ததை விட மக்கள் வெள்ளம் அதிகமாக இருந்தது.

வண்டியூர் சென்ற அழகர்

தீர்த்தவாரிக்கு பின்னர் ஆற்றங்கரை வழியே வண்டியூர் சென்று வீரராகவப் பெருமாள் கோவிலில் தங்கினார். அங்கு கள்ளழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

அங்கிருந்து புறப்பட்ட அழகர், கள்ளழகர் தேனூர் மண்டபத்திற்கு சென்று அங்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு மாலையில் சாபவிமோசனம் அளித்தார். தவளையாக இருந்த தவம் செய்து வந்த முனிவருக்கு சாபவிமோசனம் அளித்ததை விளக்கும் வகையில், சிறிய குளமும் அதில் முனிவரின் உருவம் போன்ற பொம்மையும் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவருக்கு கள்ளழகர் சாபவிமோசனம் அளிக்கும் வகையில் அங்கிருந்து நாரைகொக்கு வானில் பறக்கவிடப்பட்டது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். 62 ஆண்டுக்கு பின்னர், தேனூர் மண்டபத்தை கள்ளழகர் பெருமாள் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

விடிய விடிய தசாவதார கோலம்

அன்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தை வந்தடைந்த அழகர், அங்கு விடிய, விடிய தசாவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மட்சம், கூர்மம், வராகம், வாமனன், நரசிம்மம், உள்ளிட்ட பத்து வித அலங்காரங்களில் காட்சி கொடுத்த அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பின்னர் மோகினி அவதாரத்திலேயே மண்டகப்படிகளில் தங்கியபடி இரவு 11 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் வந்தார். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 

பூப்பல்லக்கில் திரும்பிய அழகர்

பின்னர் ஏகாந்த சேவையில் காட்சியளித்தார் கள்ளழகர். அங்கு கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமஞ்சனமான அழகர் அதிகாலையில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். கருப்பணசாமி கோயில் சன்னதி அருகே காட்சியளித்தார். கருப்பணசாமி கோவிலில் பிரியாவிடை பெற்று வையாழியான உடன் அழகர் மலைக்கு புறப்பட்ட கள்ளழகரை பக்தர்கள் சேவை செய்து பிரியாவிடை கொடுத்து வழியனுப்பினர்.

 

பக்தர்கள் பிரியாவிடை

புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தராஜன்பட்டி சென்றடைந்து அங்குள்ள மறவர் மண்டகப்படிக்கு இன்று இரவு சென்றடைகிறார். அழகர் மதுரை வரும்போது எப்படி எதிர்கொண்டு அழைக்கின்றனரோ அதேபோல அவர் மலைக்கு திரும்பும் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழியனுப்புவது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

 

சித்திரை திருவிழா நிறைவு

அப்பன்திருப்பதியில் இன்று இரவு திருவிழா நடக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று அழகருக்கு அங்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இனி அழகர் மதுரைக்கு வர ஒரு வருஷம் ஆகுமே என்பது மதுரைவாசிகளின் ஏக்கமாக மாறி விட்டது.

Comments

Popular posts from this blog